தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல- ஜனநாயக போராளிகள் கட்சி

0

தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல எனவும் தமிழ் மக்களை நம்பியே என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்துவிட்டு காத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறச் செய்யுமாறு அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

அக்கட்சியினால் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “பேரினவாத சிந்தனைக்குள் திளைத்துப்போன சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமது ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துகொள்வதற்காக அதுவரை ஒன்றுபட்டிருந்த தமிழ், சிங்கள இனங்களிடையே மொழிவாதம் இனவாதங்களைத் தூண்டி தமிழர்களை சிங்கள மக்களிற்கு பிரிவினையாளர்களாக காட்டி தமிழர்களுக்கெதிராக போர்ப் பிரகடனம் செய்தனர்.

மூன்று தசாப்தங்களாக நீடித்த பெரும் போர்களினால் மனிதப் பேரழிவுகளுடனும் ஆறாத ரணங்களுடனும் போர் முடிவுக்கு வந்தாயிற்று.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் சர்வதேச தலையீடுகளுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பேசப்பட்டன. சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தன. சடுதியாக முடித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதப்போர் தமிழர்களின் பேரம்பேசும் பலத்தினை இல்லாமல் செய்துவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் ஒன்றுபட்ட தரப்பாக ஓரணியில் திரள்வதே மீளவும் பேரம்பேசும் சக்தியினை தலைமைகளுக்கு ஏற்படுத்தும். எமது எதிர்கால சந்ததிகள் தமது சொந்த நிலத்தில் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு வழியேற்படும்.

இந்த தேர்தலிலே தமிழர்களது அரசியல் பலத்தினை உடைத்து எங்களை ஒரு பலவீனமான சமூகமாக உலகிற்குக்காட்டி ஒரு அரைகுறைத் தீர்வினை தமிழர்கள் மீது திணிக்க சிங்களதேசம் கங்கணம்கட்டி நிற்கின்றது அதற்காகவே அபிவிருத்தி என்றும் அமைச்சர்கள் என்றும் தாங்கள்தான் மாற்று அணி என்றும் மாபெரும் நடிகர்களும் துணை நடிகர்களும் நாடக நடிகர்களும் தமிழர் தேசமெங்கும் திருவிழாக்கால மணிக்கடைகளை நிறுவியிருக்கிறார்கள்.

அன்பான தமிழ் உறவுகளே! தேர்தல் கால திருவிழா, வீதி நாடகங்களைப் பாருங்கள், இரசியுங்கள் தேர்தல் முடிந்தவுடன் அவர்களும் வீட்டுக்குத்தான் செல்லப்போகிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம்.

எமது இனத்தின் தன்மான இருப்பிற்காக ஆயுதமேந்தியவர்கள் என்கின்ற உரித்தோடு கூறிக்கொள்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரால் தமிழ் மக்களது எதிர்கால அரசியல் இருப்புக்காக உருவாக்கப்பட்டது.

மிகவும் கவனத்துடனும் தூரநோக்கோடும் அது உருவாக்கப்பட்டது. தமிழர்களது உரிமைசார் விடயங்களில் விட்டுக்கொடுப்பில்லாத இந்த இறுக்கமான தமிழ் தேசிய பலத்தால்தான் காலத்திற்குக் காலம் கூட்டமைப்புக்குள் இருந்து பலவீனமானவர்கள் பிரித்தெடுக்கப்படுகிறார்கள். இருந்தும் அவர்களை எமது மக்கள் மிகத்தெளிவாக இனங்கண்டு தோற்கடித்து விடுகிறார்கள்.

இத்தரப்புக்கள் தாம் தோற்கடிக்கப்படுவோம் எனத் தெரிந்தும் தேர்தலில் போட்டியிடுவது தமது எஜமானர்களின் ஏவல்படி தமிழர் வாக்குகளை சிதைப்பதற்கே.

அன்பான இளையோர்களே! உங்களை காலம் ஒரு வரலாற்றுக் கடமைக்காக அழைத்து நிற்கின்றது. தமிழர் பகுதிகளில் தேர்தல் தினத்திலன்று அதியுச்ச வாக்குப் பதிவினை ஏற்படுத்த உங்கள் பகுதி மக்களை தயார்படுத்துங்கள். அவர்களுக்கு தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்த்துங்கள். வாக்களிக்க நாம் தவறுவோமானால் சந்திக்கப்போகும் விளைவுகளை எடுத்துக் கூறுங்கள். துணிந்து நில்லுங்கள். எமது மண்ணில் ஏனைய இனத்தவர்கள் எங்களின் மீது ஆட்சி செய்கின்ற இழி நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமாயின் உச்ச வாக்களிப்பு அவசியமாகிறது.

தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்துவிட்டு சிங்களதேசம் காத்திருக்கிறது. அவர்களுக்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

இறுதியாக எமது அன்பான மக்களே! தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல. அவர் ஒவ்வொரு தமிழ் மக்களையும் நம்பினார். தனது போராளிகளை நம்பினார். அவர்கள் தனது முடிவினை பலப்படுத்துவார்கள் என்பது தலைவருக்கும் நன்கு தெரியும்” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.