தளர்த்தப்படும் பயணக்கட்டுப்பாடு – பின்னர் அமுலாகும் இறுக்கமான நடைமுறைகள்?

0

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

பயணக்கட்டுப்பாடானது கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன, எந்தெந்த விடயங்களில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்ற உத்தியோகப்பூர்வ தகவல் இன்று(வெள்ளிக்கிழமை) அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக தற்போது நடைமுறையிலுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மற்றும் திருமணத்தினை நடத்துவது, மதுபானசாலைகளை மீளத்திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றே நம்பப்படுகின்றது.

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதை மறுக்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றே நம்பப்படுகின்றது.

குறிப்பாக அடையாள அட்டை நடைமுறை மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எப்படியோ இவை குறித்த உறுதியான அறிவித்தல்கள் இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.