தவறான தகவல்களை வழங்கி இளையோரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி – மாவை

0

வடக்கு– கிழக்கில் வேலைவாய்ப்பு வழங்குவதாக தமிழ் இளையோர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி, அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அரசின் ஆதரவு கட்சிகள் முயற்சிக்கின்றன என தமிழ் அரசுக்கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவை சோ.சேனாதிராசா மேலும் கூறியுள்ளதாவது, “அரசின் ஆதரவுக் கட்சிகள் மற்றும்  சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி இளையோரிடம் விண்ணப்பப்படிவங்களை வழங்கி விபரங்களைச் சேகரிக்கின்றனர்.

அதாவது இவர்கள், தமிழ் இளையோர்களைத் தமது பக்கம் ஈர்ப்பதற்காக உங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தவறான தகவல்களை வழங்குகின்றனர்.

இவ்வாறு திடீரென்று வேலைவாய்ப்பை எவரும் வழங்க முடியாது. நாடாளுமன்றம் உருவாகியதன் பின்னர் அதுதொடர்பில் நாடாளுமன்றுக்கு அறிவித்ததன் பின்னரே வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

தேர்தல் காலத்தை ஒட்டியோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காகவோ வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாது.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக எமது வேட்பாளர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களிலும் தமிழ் இளையோர்களிடம் எடுத்துரைத்து வருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.