தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி ரிஷாட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

0

தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி திலங்க பெரேரா ஊடாக அவர் குறித்த மனுவினை நேற்று(புதன்கிழமை) தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரன, அந்த திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் அகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 225 பேருந்துகளில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்து சென்றமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. தயாராகி வருவதாக சுட்டிக்கட்டியே அவர் குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.