திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகொணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இருப்பினும் இரண்டு நோயாளிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
மேலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி வேறு இடங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த 738 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் அதில் 269 பேருக்கு எந்தவிதமான தொற்றுக்களும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், 469 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளைப் பொறுத்தவரையில் எல்லா இடங்களிலும் கைச் சுத்தத்தை பெறுவதற்கு உரிய வழிமுறைகளை ஏற்படுத்தியிருப்பதுடன் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றால் வருகின்ற நோயாளிகளை உடனடியாக கவனிப்பதற்குறிய வழி முறைகளையும் ஏற்படுத்தியிருப்பதோடு சந்தேகத்துக்கிடமான முறையில் வருகின்ற நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கு புதிய வசதிகளையும் ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.