திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென காணாமல்போன சிறுமி!

0

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

தனது உறவினருடன் இன்று (சனிக்கிழமை) நண்பகல் பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயதுச் சிறுமி, தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து, உறவினர் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக சிறுமியை ஓரிடத்தில் நிற்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

குறித்த கடையில் தண்ணீர்ப் போத்தலை வாங்கிவிட்டுத் திரும்பியபோது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதற்றமடைந்த நிலையில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளையடுத்து குறித்த சிறுமியுடன் கதைத்துக்கொண்டிருந்த சந்தேகநபர் சிறுமியை கட்டாயமாக அழைத்துச் செல்லும் காட்சி அங்குள்ள பாதுகாப்புக் கமெராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, சில மணி நேரங்களின் பின்னர் திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறுமி அழுதுகொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் அறிவித்ததையடுத்து திருகோணமலை தலைமையகப் பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளார்கள்.

மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.