தீர்ப்பின் பின்னரும் 20இற்கு எதிரான கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடரும்! சுமந்திரன்

0

புதிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் நான்கு பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் முதன்மைச் சரத்துக்களை மீறுகின்றனதாகவும், அவை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும், எதிரணியில் உள்ள அனைவரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“இரண்டாவது குடியரசு அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீறுகின்றது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின்றி இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினோம்.

அரசமைப்புச் சட்டத்தில் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டம் சொல்கின்றது.

உயர்நீதிமன்றத்தில் குறித்த சட்டவரைவு சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பதை மட்டும்தான் உயர்நீதிமன்றத்தால் தெரிவிக்க முடியும் என்றும் அரசமைப்புச் சொல்கின்றது.

அரசமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமானது ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது.

இரண்டாவது குடியரசு அரசமைப்பின்படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக் காலத்தின்போது, அவருடைய எந்தச் செயலையும் நீதிமன்றச் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கின்ற அரண் போடப்பட்டது. அந்தக் காப்பரண் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சற்று விலக்கப்பட்டது.

அதன் மூலம் ஜனாதிபதி விடுகின்ற தவறுகள் அல்லது செய்யாமல் விடப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்ய முடியும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அறிவிப்பை உயர்நீதிமன்றம் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை அடிப்படையாக் கொண்டே அவருக்கு எதிரான தீர்ப்பை வழங்கியதாக இருந்தது.

தற்போது 20ஆவது திருத்தச் சட்டவரைவில் மீண்டும் இரண்டாவது குடியரசு அரசமைப்பின்படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவருக்கு மீண்டும் ஏற்படுத்த முயலும் காப்பரணுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதியான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்ற சரத்தை மாற்றுவதற்கும் உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கும் பொது உத்தியோகத்தர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகள் பின்பற்றப்படாவிட்டால் அவை குற்றமாகும் என்பதை மாற்ற முடியாது என்றும், அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அதுவும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

20ஆவது திருத்தச் சட்டவரைவின்படி ஒரு வருடத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆட்சிக்காலத்தில் அரைவாசிக்காலத்தின் பின்னரே அதாவது இரண்டரை வருடத்தின் பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதற்கு முன்பாகக் கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருந்த போதிலும் நாங்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில், ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நியமனங்கள் செய்கின்றபோது அதற்கான அனுமதியை அரசமைப்பு சபையிலே பெறவேண்டும் என்பது நீக்கப்பட்டு நாடாளுமன்ற சபை சில கருத்துக்களைச் சொல்லலாம் என்றும், ஜனாதிபதி தான் விரும்பியவர்களை நியமிக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்ட திருத்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை மூன்றில் இரண்டு பெரும்பாமைப் பலத்துடன் நிறைவேற்றலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவ்வாறான ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக அழைக்க முடியாது. இது ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரிப்பதாகவே அமையும் என்பதால் இதற்கு எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அரசு என்ன தீர்மானத்தை எடுக்கப் போகின்றது எனத் தெரியவில்லை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா?

அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கின்ற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளைச் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா? என்ற தீர்மானத்தையும் அரசு அறிவித்த பின்னர்தான் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் குறித்த திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.