தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறி தடையுத்தரவு ஒன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரினால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வெல்லவெளி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு ஒன்று அவசரமாக என்னிடம் கையளிக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் தொடர்பாக அந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் மிகவும் அவசரமான முறையில் எந்தவிதமான விபரங்களையும் அறியாமல் ஒரு நிகழ்வினை தடைசெய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு கூட தவறான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தையே பிழையான வழியில் வழிநடத்திய பொலிஸ் பிரிவு இந்த தடையுத்தரவை எடுத்திருக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் பொறுப்பாளர் என்று நகுலன் என்பவரின் பெயரும் இடப்பட்டு இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர் அப்பகுதியில் இல்லை. அதேபோன்று அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தினை தவறான பாதையில் வழிநடத்தி வெல்லாவெளி பொலிஸாரினால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளவர்களின் வரிசையில் முதல் இடத்தில் எனது பெயர் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. என்னை இலக்குவைத்தே நீதிமன்ற தடையுத்தரவினை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
அடக்குமுறைகளுக்கு எதிராக கூடுதலாக குரல்கொடுப்பதன் காரணமாக நீதிமன்ற உத்தரவுகள் எனக்கு வழங்கப்படுவதாக கருதலாம்.
தியாக தீபம் திலீபன் அவர்கள் இந்திய படையினருக்கு எதிராக அகிம்சை ரீதியாக போராடியவர். அவரை நினைவுகூரமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸார் விடுதலைப்புலிகள் என்ற பெயரை பயன்படுத்தி தடையுத்தரவுகளை பெறுவது என்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது.
அண்மையில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்பும் செயற்பாடு என்று தெரிவித்து தடையுத்தரவு அந்த போராட்டத்திற்கு பெறப்பட்டிருந்தது. 60வயது 70வயது தாய்மார்கள் செய்த போராட்டத்தினை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தியது ஒரு வேடிக்கையான விடயம்.
அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி அந்த காரணத்தினால்தான் இந்த நிகழ்வினை தடைசெய்கின்றார்கள் என்று சொன்னால் இந்த நாட்டில் தமிழர்கள் மீதான ஜனநாயகம் குறைந்துசெல்கின்றது என்பதை நாங்கள் உணரவேண்டும்.
இவ்வாறான விடயம் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்கள் இதுவரையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.
மக்கள் இந்த நிகழ்வினை நடாத்துவதை விரும்பவில்லையென அவர்கள் கருதுகின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரளவில் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் கூட தமிழர் தரப்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே களத்தில் இருப்பதை காணடிமுடியும்.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய பொறுப்பினை நாங்கள் கொண்டிருகின்றோம். வருங்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடைகள் வருமானால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான செய்தியை விரைவில் தமிழ் மக்கள் தெரிவிப்பார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.