கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்றபோது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டிலே இறந்தவர்களை மறைந்தவர்களை எண்ணி அழுவதற்கான உரிமைகூட இல்லையா என்று கேட்கக்கூடிய நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.
துக்கத்தை அனுஷ்டிப்பதற்கான உரிமைகூட மறுக்கப்படுகின்ற நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட கடப்பதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவாகி வருவதாக தெரிகின்றது.
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பங்கிடாவெளிக்கு அண்மையில் காணப்படுகின்ற இலுப்படிச்சேனை என்று சொல்லப்படுகின்ற பாரம்பரியமான நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற மண்ணில் தற்போது தொல்லியல் இடங்களை அடையாளங்காணுதல் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் அங்கு சென்று உறுதிப் பூமியாக இருக்கின்ற தனியாரின் காணிகளை அடையாளங் கண்டுகொண்டு அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கான அல்லது அபகரிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பிலுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்று சொன்னால் இந்த உலகத்திற்கே தெரிந்த ஒரு மனிதராவார். அவர் ஒரு மதகுரு போன்று இங்கு செயற்படவில்லை. அந்த இடங்களுக்குச் சென்று அடிதடிகளில் ஈடுபடுகின்ற ஒருவராக இருக்கின்றார். அங்கிருக்கின்ற அரசாங்க அதிகாரிகளைக்கூட அவர் மதிப்பதாகத் தெரியவில்லை.
அண்மையில் முகநூல்களில் வெளிவந்த காணொளிகளைப் பார்க்கின்றபோது அவரது அட்டகாசங்கள் மிகவும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. அரச உத்தியோகத்தர்களை தாறுமாறாகப் பேசுவது, கெட்டவார்த்தைகளால் பேசுவது, அவர்களின் கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுவது, அடிப்பது, அட்டகாசம் பண்ணுவது என்ற அடிப்படையில் இவர் செயற்படுகின்றார்.
இவரது இந்த செயற்பாடுகளானது இந்த மண்ணில் அமைதியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாரிய தடைக்கல்லாக இருக்கின்றது.
இதனை அரசாங்கமும் பொலிஸாரும் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இருக்கின்றபோதே இந்த அட்டகாசங்கள் நடக்கின்றதென்றால் இது எமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக பின்நோக்கி நகர்த்தக்கூடிய பிற்போக்குவாதமான செயற்பாட்டை காட்டக்கூடியதாக இருக்கின்றது.
இன்று கூட தொல்லியல் இடங்களை அடையாளங் காணுதல் என்ற தோரணையில் அந்த நிலத்தை அளந்து அபகரித்துக்கொள்வதற்காக அல்லது சவீகரித்துக்கொள்வதற்காக ஒருசில அதிகாரிகள் அங்கு செல்வதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போகின்றது, வேலை வாய்ப்புகளை வழங்கப்போகின்றது என்று மிகவும் பீறிட்டு பேசியவர்களெல்லாம் அந்த இடத்தில் இல்லை. இராஜாங்க அமைச்சராக இருக்கலாம் அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் அவர்கள் இப்போதில்லை.
கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்றபோது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது.
இதுதான் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்வது என்பதைவிட இப்போது அட்டகாசமான ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற அரசாங்கக் கட்சி சார்ந்தவர்களை நாடுகின்றபோது நாடமுடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.
இந்த இடத்தில் மக்கள் மிகவும் விழிப்பாக சிந்திக்க வேண்டும். கிழக்கு மண்ணை பாதுகாப்பதாக பல வர்ணஜாலப் பேச்சுக்கள் நடைபெற்றது. இப்போது எமது பூர்வீகமான மண்ணில் பாரம்பரியமாகத் தமிழர்கள் வாழ்ந்த மண்ணில் மண் அபகரிப்பதற்கான செயற்பாடுகள் தொல்லியல் இடங்கள் என்ற அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த விடயங்களை பொறுப்புள்ள அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட கவனமாக கண்காணித்து முறையான செயற்பாடுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இது பாரதூரமான விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
தற்போது தியாகதீபம் திலீபன் அவர்களது அஞ்சலி செலுத்தும் விடயத்தில்கூட கடந்த ஆட்சியின்போது அதனை செய்யக்கூடிய நிலைமை காணப்பட்டது. இப்போது அதனை செய்யக்கூடாதென்று நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டிலே இறந்தவர்களை மறைந்தவர்களை எண்ணி அழுவதற்கான உரிமைகூட இல்லையா என்று கேட்கக்கூடிய நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். துக்கத்தை அனுஷ்டிப்பதற்கான உரிமைகூட மறுக்கப்படுகின்ற நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.