இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முதற்பெணமணி டொக்டர். ஜில் பைடனினால் காணொளி கலந்துரையாடல் ஊடாக இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தைரியமிக்க பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் போரினால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.
உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக International Women of Courage விருது வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறை 15 ஆவது ஆண்டாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.