தேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்

0

தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை அனப்பிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த கடிதத்தில், ‘தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதற்கான பதில் கடிதத்தை சம்பந்தனுக்கு நேற்று இரவு மாவை சேனாதிராஜா அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய ‘தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசி பொருத்தமான முடிவு எடுப்பேன்’ என்று தனது பதிலில் மாவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் புளொட், ரெலோ தலைவர்களுடன் மாவை சேனாதிராஜா இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கம் நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் எவ்வித கலந்துரையாடலையும் கட்சி தலைமைகள் மேற்கொள்ளவில்லை என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியிருந்தார்.

அத்தோடு, கட்சித் தலைவரான தனக்கும் தெரியாமல்தான் தேசியப் பட்டியலுக்கு கலையரசனை நியமிப்பது என்ற முடிவு மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக மீண்டும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.