தேர்தலை நடத்த முற்படக்கூடாது – மனோ கணேசன்

0

கொரோனா அச்சம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் தனது சுயலாபத்திற்காக தேர்தலை நடத்த முற்படுவதானது சுயாதீனமான தேர்தலுக்கு ஒருபோதும் வழிவகுக்காது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்று அந்தத் தேர்தலை நடத்துவதா- இல்லையா என்பதை பிறகு யோசித்துக் கொள்ளலாம்.

ஆனால், நான் இங்கு ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்திற்கு அமையவே, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான திகதியிலிருந்து இருந்து குறைந்தது 5 வாரங்களுக்கும், கூடியது 7 வாரங்களுக்கும் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர்தான் தேர்தல் திகதியை அறிவிக்க முடியும். இந்த கால இடைவேறிக்குள் பிரசாரங்கள் அனைத்தும் இடம்பெற வேண்டும். இங்கு ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மே 15 ஆம் திகதி தான் அடுத்த 35 நாட்களில் முதலாவது நாள் ஆரம்பமாகவுள்ளது.

அப்படியானால், மே மாதம் 15 ஆம் திகதி நாம் பிரசாரங்களை ஆரம்பிக்க வேண்டும். பிரசாரங்களை ஆரம்பிக்க வேண்டுமாக இருந்தால் இந்நாட்டில் கொரோனா பிரச்சினை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பை, சுகாதார அதிகாரிகள் வழங்கி, அதனை ஜனாதிபதி செயல்படுத்த வேண்டும். ஊரடங்கு, கொரோன எல்லாம் இல்லாத காலத்தில்தான் பிரசாரங்களை மேற்கொள்ள முடியும்.

இதுதான் சுதந்திரமான தேர்தலுக்கும் வழிவகுக்கும் என நாம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த கொரோனாவை வைத்து அரசியல் லாபம் தேட முற்படலாமே ஒழிய, தேர்தலை நடத்த முற்படக்கூடாது. இதனை அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.