தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
சட்ட விரோத தேர்தல் பிரசார பேரணிகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமய வழிப்பாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனவும் சமயம் சர்ந்த உற்சவங்களிலும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க கூடாது எனவும் முன்னரே பல தடவைகள் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவுறுத்தல்களையும் மீறி அவ்வாறு செயற்படுவது, தேவையற்ற அச்சுறுத்தல்களை விடுத்தல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஒருவர் இதன் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் அது அவரின் பிராஜாவுரிமையை இரத்து செய்ய காரணமாக அமையும் என்பதோடு சிலவேளை அவர் வெற்றிப்பெற்றால் அவருக்குரிய ஆசனமும் இல்லாமல் போகும் எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.