நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களில் மீண்டும் கூட்டலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தபோதும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எவ்வித மாற்றுக் கருத்தினையும் கொள்ளவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தம்மால் தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாதுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதா அல்லது அல்லது தேர்தலை நடத்துவதா என்ற நிலைப்பாட்டுக்கு இதுவரை அரசாங்கம் வரவில்லை என கூறிய அவர் இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருக்கின்றது என கூறினார்.
இது குறித்த நிலைப்பாடு ஏற்கனவே ஜனாதிபதியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தேர்தலை நடத்துவது தொடர்பான திகதியை அவர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பலர் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட விடும் என அழைப்பு விடுக்கின்றனர் என தெரிவித்த அமைச்சர், மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய நிலை இல்லை என்றும் அதனை மீண்டும் கூட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.