எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிரதான கட்சிகளின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
முக்கிய அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் வரவிருக்கும் 2020 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக 700 மில்லியனுக்கும் அதிகமான மறைமுக செலவினங்களை இரண்டு வார காலத்திற்குள் (ஜூலை 2 முதல் 15 வரை) செலவிட்டுள்ளனர் என அந்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கிட்டத்தட்ட 7,500 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அரசியல் கட்சிகளின்படி செலவினங்கள் குறித்து அறிக்கை தொகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு 20-30 விகித செலவினங்களை மட்டுமே உள்ளடக்கியது என்றும், துல்லியமாக மதிப்பிடக்கூடியதை விட அரசியல் கட்சிகள் மிகப் பாரிய அளவிலான செலவினங்களைச் செய்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியே அதிகளவிலான செலவுகளை மேற்கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 185 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளது.
மொத்த மதிப்பிடப்பட்ட செலவினத்திலிருந்து, 168 மில்லியன் இலத்திரனியல் ஊடக விளம்பரங்களுக்காகவும், 6 மில்லியன் அச்சு ஊடகங்களுக்காகவும், 2 மில்லியன் சமூக வலைத்தளங்களிலும், 9 மில்லியன் பிற செலவுகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி செலவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மொத்தம் 151 மில்லியன் ரூபாயினை செலவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலத்திரனியல் ஊடக விளம்பரத்திற்காக 107 மில்லியனையும், அச்சு ஊடகங்களுக்கு 19 மில்லியனையும், சமூக வலைத்தளங்களுக்கு 5 மில்லியனையும், மற்ற செலவினங்களுக்காக 20 மில்லியனையும் செலவிட்டுள்ளது.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் செலவு 123 மில்லியன் என தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் கணித்துள்ளது.
இந்த தொகையில் 111 மில்லியன் இலத்திரனியல் ஊடக விளம்பரங்களுக்காகவும், 10 மில்லியன் அச்சு ஊடகங்களுக்காகவும், தலா 1 மில்லியன் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற செலவுகளுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தி 36 மில்லியன், அபே ஜனபல வேகய 13 மில்லியன் ரூபாயினை செலவிட்டுள்ளன.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு வாரங்களில் 5 மில்லியனை செலவிட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் குறைந்த பிரசார செலவுகளை மேற்கொண்ட கட்சியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி (1 மில்லியன்) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.