தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுகளுக்கு தற்காலிகத் தடை

0

பாடசாலைகளில் நடத்தப்படும் தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுப் போட்டிகளும் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரையில் இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பாடசாலைகளில் தொடுகையற்ற ஏனைய போட்டிகளின் பயிற்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 11 , 12 மற்றும் 13 ஆம் தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த வகுப்புகளுக்கான பாடவிதான ஆசிரியர்களை மாத்திரம் அனுமதிக்குமாறும் பாடசாலைக் கல்வி செயற்பாடுகளை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை முன்னெடுக்குமாறும் அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தினங்களும் அனைத்து அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.