தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

0

கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பல பிரச்சினைகள் தோன்றும் என பொது  சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் அற்ற நபர்களை வீட்டில் வைத்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், போதியளவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை முன்வைக்கப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் தமது தரப்பிலிருந்து சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படுவதோடு, தொடர்ந்தும் பழைய வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கு, அவசர தேவைகளுக்கு வழங்குவதற்கான போதிய மருந்து பொருட்களும் வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.