இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தூதுவர், இலங்கை நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்டது என்றும் இலங்கை தனது ஜனநாயக கட்டமைப்பினை பலப்படுத்துவது மற்றும் ஆழமாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த ஸ்தாபனங்களிற்குள் எதனை உள்வாங்கவேண்டும் என தெரிவிப்பது அமெரிக்காவின் பணி என தான் கருதவில்லை என தெரிவித்துள்ள தூதுவர், தேர்தலிற்கு பின்னர் அரசமைப்பிற்கான பத்தொன்பதாவது திருத்தம் செயல் இழக்கச்செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் 19வது திருத்தத்தின் தகுதிகளை பரிசீலிக்கவேண்டும். அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களான மனித உரிமை ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் போன்றவை குறித்தும் சிந்திக்கவேண்டும்.
ஜனநாயகத்திற்கு எவை பங்களிப்பு செய்கின்றன என்பது குறித்தும் இலங்கை மக்கள் சிந்திக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மிலேனியம் சவால் உடன்படிக்கை குறித்து தீர்மானம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.