தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் நாளை

0

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் நாளைய (17) தினம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

தொழிலற்ற பட்டதாரிகளுக்காக 50,000 தொழில் வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மிகுதி ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஓரிரு வாரங்களில் 50,000 பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தார்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.