த.தே.கூட்டமைப்பை மட்டும் விமர்சனம் செய்யும் கட்சிகள் தங்களது கொள்கைகளை மக்களிடம் கூறவேண்டும்- சாணக்கியன்

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டும் விமர்சனம் செய்துகொண்டு வாக்குக் கேட்கும் கட்சிகள் தங்களது கொள்கைகளையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “பல அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பற்றி மக்களுக்கு தெளிவூட்டுவதைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

நேற்றைய தினமும் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் கட்சியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு பொதுவான விவாதத்திற்கு வருவதாக முன்வந்து பின்னர் ஒதுங்கிக்கொண்டார்.

அவர்களுக்கு மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான காரணத்தை சொல்லமுடியாமல்தான் அவர்கள் ஒதுங்கிக்கொண்டுள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் என்ற உறுதியான நிலையில் வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைக் குறைக்க ஏனைய கட்சிகள் பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இவ்வாறுதான் சைக்கிள் கட்சியின் கஜேந்திரகுமார் சொல்லுகிறார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர வேறு எந்தக் கட்சிக்கொன்றாலும் மக்கள் வாக்களிக்கலாம் என்று.

அவரது கருத்துப்படி சிங்களக் கட்சிகளுக்கும் அவர் வாக்களிக்கச் சொல்வதாகவே தெரிகின்றது. அதாவது யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேறு பேரினவாதக் கட்சிகள், அங்கஜனின் கட்சி, விஜயகலாவின் கட்சி என அவர்களுக்கும் வாக்களிக்கக் கேட்பதாகவே அவர் கூறுவதாக விளங்குகிறது.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கின்ற கட்சியாகும்.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துக்காகவே வெவ்வேறு சின்னங்களில் பல கட்சிகள் களமிறங்கியுள்ளன. தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை அழிக்க வேண்டுமென்பதே இவர்களது கொள்கை.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் என்று அறிந்தபின்னர் இந்த மாவட்டத்தில் சில கட்சியின் வேட்பாளர்களே இன்று ஒதுங்கிப்போகும் நிலை காணப்படுகிறது.

அத்துடன், ஒருசில கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சில ஊடகங்களுக்குப் போயுள்ளார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்ற 3 வேட்பாளர்கள் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றுக்குப் போய் மட்டக்களப்பு மக்களுடைய மானத்தை வாங்கிவிட்டார்கள். எமது மக்களே, இவர்கள் யார் என்று கேட்கும் அளவுக்கு மானத்தை வாங்கியுள்ளர்கள். இந்நிலையில், மக்கள் வாக்களிப்பின்போது தெளிவான பதிலை அவர்களுக்கு வழங்குவார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்து அரசியல் செய்யாமல் கட்சிகள் தங்கள் கட்சிகளின் கொள்கைகள், கருத்துக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கம் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சிக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.