தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு வெளியில் இருப்பவர்களால் ஏன் அவர்களுக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு ஒற்றுமை இல்லாதவர்களால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகின்றது எனவும் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழை விடுகிறது என்று கூறும் மாற்றுத் தரப்புக்கள் கடந்த காலங்களில் என்ன செய்தன?
வடக்கைப் பொறுத்தமட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கூட்டமைப்பிலிருந்து உடைந்துசென்ற ஏனைய தரப்புகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
குறிப்பாக விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. ஒரு குடையின் கீழ் வராவிட்டாலும் பரவாயில்லை ஆளுக்காள் பகிரங்கமாக மோதிக் கொள்ளாமலாவது விடலாம்.
மட்டக்களப்பைப் பொறுத்தமட்டில் கிழக்கை மீட்போம் என்று கூறியவர்கள் சரணாகதி அரசியலை நோக்கி பல திசைகளில் நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஒற்றுமை இல்லாத இவர்களால் எப்படி கிழக்கை மீட்க முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்று அணி என்று கூறி ஒவ்வொருவரும் ஆசனத்தைக் கைப்பற்றி நாடாளுமன்றம் செல்வதால் எந்த விதத்திலும் எமது மக்களுக்கு நன்மை கிடைக்கபோவதில்லை. கூட்டமைப்பை விமர்சிக்கும் வகையில் மேடைகளில் பேசி மக்களை ஏமாற்றிவிடலாம் என யாரும் நினைத்துவிட முடியாது.
இந்நிலையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சனங்களைத் தாண்டி வெற்றிபெறும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.