நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம்

0

கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் பலவற்றை மையப்படுத்தி விரைவான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டுச் சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகளுடன் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வந்து பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கடன் பெறாமல் முதலீடுகளினால் மட்டும் புதிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து திட்டங்களும் சுதேச கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களின் அபிவிருத்தியை விரைவாக ஆரம்பிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகளை தெரிவுசெய்து கையகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறைந்த, மத்திய மற்றும் உயர் வருமானம் பெறுவோருக்காக வீடுகளை நிர்மாணிக்கும் பணியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்காகக் கொண்டு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை நிர்மாணித்து வாடகை அடிப்படையில் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள, கொழும்பு நகரை அண்மித்த அனைத்து பாரியளவிலான கட்டிடங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடி விரைவாக மீண்டும் அவற்றை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களை இணைத்து நிர்மாணிக்கப்படவுள்ள வீதி முறைமையின் பணிகளையும் விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பயன்படுத்தப்படாத காணிகளை இனம்கண்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீதியின் இருபக்கங்களிலும் சூழல் நட்புடைய விவசாய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டது.