நல்லூர் ஆலய பெருந் திருவிழாவிற்கு கொரோனா நெருக்கடி காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் ஏனைய பாகங்களில் உள்ள ஆலயங்களுக்கு உள்ள விதிமுறைகளைப் போலவே நல்லூர் ஆலயத் திருவிழாவிற்கும் விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை விஜயம்செய்த இராணுவத் தளபதியிடம் நல்லூர் உற்சவ காலத்திற்கு மக்களை அனுமதிப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இம்மாதம் 25ஆம் திகதி வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருவிழா தொடர்பாக எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்து மக்கள் வருவார்கள். ஆனால், இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்கு வரும் அடியவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணியவேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. எனினும் நல்லூர் ஆலயத்தைப் பொறுத்தவரை உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் என்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல் எல்லா இடங்களிலிருந்தும் அடியவர்கள் கோயிலுக்கு வருவதனால் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். எனவே அதனைப் பின்பற்றி திருவிழாவை நடத்த மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியிடமும் கூறியுள்ளேன்” என்று தெரிவித்தார்.