நாடாளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது சிறந்ததல்ல – மைத்திரிபால சிறிசேன

0

நாடாளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிறந்ததல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் காணப்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் சுகாதார நிலைவரம் என்பன தொடர்பில் மத்திய குழு கூட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.

அத்தோடு அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காகவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தல் என்பவை தொடர்பில் எமக்குள்ள பொறுப்பு மற்றும் பணிகள் பற்றியும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

பிரதானமாக நாட்டில் தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம்,விசேட சுகாதார நிபுணர்கள் தலைமையிலான சுகாதாரத்துறையினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் வழங்கும் ஒத்துழைப்பு பிரதானமானதாகும்.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கும் ஏனைய அனைத்து துறையினருக்கும் தனிப்பட்ட ரீதியில் கௌரவத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். நாட்டில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து துறைகளும் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும் காலநிலை வழமைக்கு திரும்பியதன் பின்னர் அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு நாட்டுக்குத் தேவையான உள்நாட்டு உணவு உற்பத்திகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கட்சி என்ற ரீதியில் நாம் சுயாதீனமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

எனினும் அதனை விட பாரதூரமான வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையும் சர்வதேசமும் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்போது உலக பொருளாதாரம் திடமான நிலையில் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சர்வதேசத்தின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உதவ தாயாரகவுள்ளது.

தற்போது பிரதானமாக நாடாளுமன்றம் மற்றும் பொருளாதாரம் பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. எங்களின் தனிப்பட்ட நிலைப்பாடானது தேர்தல் பற்றிய பிரச்சினையை விடவும் நாடாளுமன்றத்தின் பொறுப்பு மற்றும் அரசியலமைப்பிற்கமைய நாட்டை ஆட்சி செய்தல் என்பவற்றிக்காக நாடாளுமன்றத்தின் கடமைகள் என்பவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றம் இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

தற்போது கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் பொதுத் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும்.

நாடாளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிறந்ததல்ல. தேர்தல் காலம் தாழ்;த்தப்படும் போது நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளும் நெருக்கடிகளும் மேலும் அதிகரிக்கும். எனவே தேர்தல் நடத்தப்படுவது மிகவும் அவசியமானதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ‘ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன’ என்ற கூட்டணியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய தேர்தலில் ஜனாதிபதிக்கு பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

அதே போன்று நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒன்றாக போட்டியிட்டு பெரும்பான்மையைப் பெறுவோம் என்பது எமது எதிர்பார்ப்பாகும். சுமார் 5 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் செயற்பட்டது நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் அல்ல. அதற்குள் அரசாங்கம் மற்றும் நாட்டினுள் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இவ்வாறு கடந்த காலத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலைமைகள் நினைவில் உள்ளன.

எனவே அரசியல் ஸ்திரத்தன்மைக்குள் தற்போதைய ஜனாதிபதி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானதாகும். இன்று எமது தேசிய வீரர்கள் தினமாகும். தமது அர்ப்பணிப்பினால் இது போன்றதொரு தினத்தில் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த வீரர்கள் அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் நினைவு கூறுகின்றோம்.

அதே போன்று தற்போதும் வீரர்கள் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பாடுபடுகின்றனர். அவர்கள் மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.