நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமை குறித்து அம்பிகா சற்குணநாதன் விளக்கம்!

0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் விளக்கமளித்துள்ளார்.

நேற்று(புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பற்றி நான் ஆழமாக சிந்தித்தேன். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது தேசிய பட்டியலில் என்னுடைய பெயரை உள்ளடக்குவதற்கும் முன்வந்தனர்.

இதேவேளை, எனக்கு எதிராக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிழையான தகவல்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கு போட்டியிட வழங்கப்பட்ட வாய்ப்பினை வாபஸ் பெற்றதாகவும், மற்றும் தேசிய பட்டியலில் என் பெயரை சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வலம் வருகின்றன.

உண்மை என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் எதுவுமே அவர்களால் வாபஸ் பெறப்படவில்லை.

மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக என்னுடைய முடிவேயாகும். இம்முடிவை சில தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே நான் எடுத்துள்ளேன்.

அத்துடன் அரசியலில் மற்றும் பொது விடயங்களில் ஈடுபட எண்ணம் கொள்ளும் அல்லது அவ்வாறு எண்ணுவதாக நம்பப்படும் பெண்களுக்கு எதிராக பொய்யான பிரசாரங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது கவலைக்கிடமான விடயமாகும்.

ஆண் ஆதிக்கம் செரிந்த இந்தத் துறையில் பெண்களின் செயல்திறன் மிக்க மற்றும் சமமான பங்குபற்றலை தடுக்கும் வண்ணமானதாகவே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் சில ஊடக நிறுவனங்களும் ஊடக தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை புறக்கணித்து நேர்மையான விதத்தில் சரியான செய்திகளை வெளியிடும் பணியில் இருந்து விலகி பொய்யான மற்றும் பிழையான தகவல்களை பரப்புகின்றமை சமூகப் பொறுப்பற்ற செயலாகும்.

இத்தருணத்தில் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவினை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பொதுச் சேவைகளில் எனது பணி இடைவிடாது தொடரும் என உறுதியளிக்கின்றேன்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.