நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் அமுலானது ஊரடங்கு!

0

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலேயே இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 6ஆம் திகதி 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும்.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்களின் நட மாட்டம் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.