நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், 878 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 30 ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு 13ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர் தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, உயிரிழந்த இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில், இரண்டு உயிரிழப்புகளும் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 467 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 982 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடுமுழுவதும் 8 இலட்சத்து 48 ஆயிரத்து 814 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, பொகவந்தலாவ குயினா தோட்டம் கிழ்ப்பிரிவில் வசிக்கும் 120 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றின் முடிவுகள் இன்று எதிர்ப்பார்க்க்பட்டுள்ளது.

மேலும், பொகவந்தலாவை பிரதேசத்தில் இதுவரை 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பசறை – கணவரெல்ல பகுதியைச் சேர்ந்த 18 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

குறித்த பகுதியில் மேலும் 2 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பசறை – கணவரெல்ல பகுதியில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.