நாட்டில் சர்வாதிகார இராணுவ ஆட்சி; இந்தியா மௌனம் கலைக்க வேண்டும் என்கிறார் மாவை

0

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்தல் நிறைவுக்குப் பின்னர் நாட்டில் முழுமைப்படுத்தப்பட்ட சர்வாதிகார இராணுவ ஆட்சி தோற்றம் பெற்றுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலையை எதிர்பார்த்து ஏழு தசாப்தங்களாக போராடிக்கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதுகரிசணை கொண்டு செயற்பட்டுவரும் பிராந்திய தலைமை நாடான இந்தியா தொடர்ந்தும் மௌனமாக இருப்பதை விடுத்து இலங்கை அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் போக்கிற்கு கடிவாளமிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக  கருத்து வெளியிடுகின்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடன் ஆட்சியில் அமர்ந்த கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள தேசியவாதத்தினையும் பௌத்த முதன்மை வாதத்தினையுமே கையிலெடுத்து ஆட்சியை முன்னகர்த்தினார்.

அதுமட்டுமன்றி ஓய்வு பெற்ற படைத்தரப்பின் அதிகாரிகளை சிவில் நிருவாகத்தினுள் உள்ளீர்த்தார். நாட்டின் தொல்பொருள் பாதுகாப்புக்காக விசேட செயலணிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலும் தனிச்சிங்களரூபவ் பௌத்த தேரர்களின் அங்கத்துவத்திலும் அமைத்திருந்தார்.

அதுமட்டுமன்றி மாவட்ட செயலகங்களில் இராணுவத்தினை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் படையினரின் நடமாட்டங்களும் , சோதனைச் சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு போர்க்கால நிலைமைகளை ஒத்ததாகவே வடக்கில் அன்றாட நிலைமைகள் காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன

இதனைவிடவும், அண்மையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்காக படையினர் பிரசாரங்களில் பங்கேற்றிருந்தனர். அப்பாவி மக்கள் மீது சரமாரியான தாக்குதல்களையும் வாக்கு எண்ணும் நிலையங்களில் மேற்கொண்டிருந்தனர்.

இவ்விதமான முழுமையான ஜனநாயகத்தினை மறுதலிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. பாராளுமன்ற தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை என்று புறமொதுக்குவதோடு இந்த நாட்டில் இனப்பிரச்சினையே இல்லையென்ற மனநிலையில் ஜனாதிபதி இருப்பதும் கவலைக்குரியதாகும்.

அதுமட்டுமன்றி புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவை நியமிக்கப்பட்டள்ள நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக பாதுகாப்பு அமைச்சினை தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதிரூபவ் அமைச்சரவை அந்தஸ்துள்ள 28அமைச்சுக்களில் நான்கிற்கு ஓய்வு நிலை படை அதிகாரிகளை செயலாளர்களாக நியமித்துள்ளார்.

குறிப்பாக வெளிவிவகாரம், சுகாதாரம் போன்ற சிவில் சமூகத்தினருடன் அதிகம் தொடர்புடைய அமைச்சுக்களுக்கு படைத்தரப்பினரை செயலாளராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடயமாகும்.

இதனைவிடவும் 13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கான தீர்வாக இல்லாது விட்டாலும் அதில் இருக்கின்ற அதிகாரங்களை மாற்றியமைப்பதாகவும் ஆளும் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழின விடுதலைப்பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக தமிழர்கள் மீது இந்தியாவின் கரிசணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் கரிசணை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

ஆகவே இந்தியா இருதரப்பு உறவு என்பதன் பெயரால் இலங்கை அரசாங்கத்தின் விடயத்தில் மௌனமாக இருப்பது பொருத்தமல்ல. நாடு தற்போது சர்வாதிகார இராணுவ ஆட்சியில் இருக்கின்றது. தொடர்ந்தும் இந்தியா மௌனமாக இருப்பதை தவிர்த்து உடன் தலையீடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த நிலைமை தொடர விடப்படுமாயின் இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் சமநிலை குலைவதற்கும் ஆபத்துக்கள் உள்ளன என்றார்.