ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாய்க்கும் மீன் ரின் ஒன்று 100 ரூபாய்க்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றில் முழு நாடும் அச்சமடைந்துள்ள நிலையில் மக்களை தெளிவூட்டும் நோக்கில் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக நாடுகள் பாதிக்கப்பட்ட போது இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், அதன் பின்னர் பாதிப்பு ஏற்படும் என்றால் அதற்கு முகம் கொடுக்க விசேட படையணி உருவாக்கினோம்.
சீனாவைத் தொடர்ந்து
நாட்டில் தற்போதுவரை 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முன்னர் நாட்டுக்கு வருகை தந்துள்ளவர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறையின் போது ஒன்றுக் கூடல்கள், பொது நிகழ்வுகள் மற்றும் களியாட்டங்களிலிருந்து முற்றாக விலகிருக்குமாறு கோருகின்றேன்.
கொரோனா தொற்றை தடுப்பதற்கு நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முடியும்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தலைமைத் தாங்க வேண்டும். விடுமுறையின் போது நீர் பிரச்சினை மற்றும் விவசாய மக்களுக்கு உரப் பிரச்சினை போன்றன இருக்கின்றன. ஆகவே, நாங்கள் சமூகத்தை கவனத்தில் கொண்டே அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
இதேவேளை, தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை உருவாக்கி புதிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அதனால், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு என்னுடன் இணையுமாறு அழைப்புவிடுக்கின்றேன். அத்தோடு, தற்போதைய நிலையில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு இடமளிக்க முடியாது.
தூர நோக்குடன் செயற்பட்டால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்பட முடியும். மேலும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.
இந்த நிலையில் இலங்கையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று சவாலுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயார். ஆனால், அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக மக்கள் ஆதரவளித்து செயற்பட வேண்டும்.
இதேவேளை, மக்களுக்கு பாதிப்பில்லாது பொருளாதாரம், சந்தை, போக்குவரத்து, வங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு, இன்று இரவு முதல் 65 ரூபாவிற்கு பருப்பும் 100 செமன் ரீன் வழங்கப்படுவதுடன் அதைப் போன்று எதிர்வரும் நாட்களில் ஏனைய மானியங்களும் வழங்கப்படும்.
அத்தோடு, வங்கி கடனை மீளப் பெறுவதை 6 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்.