நான் யார்…? இரா.சாணக்கியன் தன்னிலை விளக்கம்

0

தான் யார் என்பது குறித்து இரா.சாணக்கியன் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

‘கடந்த சில நாட்களாக என்னைப் பற்றியும், எனது குடும்ப பின்னணியைப் பற்றியும் சரியான தெளிவு இல்லாத சில நபர்களும் தேர்தலில் போட்டியிடும் ஒரு சில வேட்பாளர்களும் என்னுடைய தாய் மற்றும் என்னைப் பற்றிய சில அவதூறான கருத்துக்களை சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.

எனக்கு மக்களிடம் இருக்கும் அமோக ஆதரவினை சீர்குலைக்கவும் எனது வெற்றியினை இதன் மூலம் தட்டிப்பறித்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்.

இதனை நான் இவ்வளவு நாட்களும் கருத்திலெடுக்காது செயற்பட்டபோதிலும் இவர்களது இச் செயல் தற்போது வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கின்றது.

அவர்களின் சமூக ஊடக கருத்துக்களானது மிகவும் கீழ்த்தரமனதாக போய்க்கொண்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட புத்திசுவாதீனம் இல்லாத ஓர் சிலருக்கான தெளிவினைக் கொடுப்பதற்காகவே உங்களை நான் இங்கு கூட்டியுள்ளேன் அத்துடன் இங்கு சில கருத்துக்களை ஆதாரத்துடன் பதிவு செய்கின்றேன்.

எனது தாய் மற்றும் எனது தாயின் தந்தை சிங்களவர்கள் என குறிப்பிட்டு பலர் சமூக வலைத்தளங்களில் சொல்வதற்கு கூட கேவலமான வகையில் பல இடுகைகளை பதிவு செய்துள்ளார்கள்.

இதற்கான தக்க பதிலடியாக நான் அவர்களுக்கு வழங்குவது எனது தாய் மற்றும் எனது பாட்டனார் ஆகியோர் தமிழர்கள் என உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட எனது தாயாரின் பிறப்பு சான்றிதழுடன் எனது பாட்டனாரின் (தாயின் தகப்பனாரின்) அடையாள அட்டையையும் இணைத்துள்ளேன்.

இதனை அனைத்து ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களுக்கும் தகுந்த ஆவணமாக சமர்ப்பிக்கின்றேன். தமிழ்ப் பாரம்பரியத்தை கொண்ட எனக்கும் எனது குடும்பத்திற்கும் கேவலமான வார்த்தைகளை மொழிந்து அவதூறினை ஏற்படுத்துவதில் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி எது என்பது எனக்கு தெரியவில்லை.

இப்படியான பொய்யான கருத்துக்களை கூறி அரசியல் செய்யும் ஓர் சில அரசியல் வாதிகள் அரசியலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லலாம். இவர்கள் பதவிக்கு வந்து சாதிக்கப்போவதை இதில் இருந்தே தெளிவாக தெரிகின்றது.

பிறரை விமர்சிப்பதற்கு முன்பு அவர்களுக்குள் காணப்படும் குறைகளை நிறைவானதாக மாற்றுவதற்கான வழியையும் அவர்களின் பூர்வீகத்தையும் தேடிப் பார்க்க சொல்லுங்கள். என்னால் எனது பாரம்பரிய தலைமுறைகள் சம்பந்தமான விபரங்களை தரமுடியும்.

குறைகூரறுபவர்களால் முடியுமா…? உங்கள் குறைகளை நிறைவாக்குவதற்கே உங்கள் வாழ்நாட்கள் போதுமானதாக இருக்கும். என்னுடைய தாயைப் பற்றி நீங்கள் கேவலமாக விமர்சிக்கும் விமர்சனங்களைப் பார்த்து அதை வாசிப்பதற்குக் கூட மிகவும் மனதிற்கு கடினமாக உள்ளது.

சில நேரங்களில் நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்று கூட நினத்ததுண்டு. என் மக்களுக்கு சேவையாற்றவென இப்படியானவர்களை சகித்து கொண்டு வருகின்றேன். அத்துடன் என் தாயாரைப் பற்றிய சில உண்மைக்குப் புறம்பான தகவல்கள் என் மனதில் ஆழ்ந்த கவலையை உருவாக்குகின்றது.

முன்னெறி தெய்வங்களில் தாயை முதலிடத்தில் வைத்திருக்கும் தமிழ்ப் பண்பாட்டில் பிறந்து, பெண்மையை மதிக்கும் பாரம்பரிய தமிழ் வழி வந்த எனக்கு இவ்வாறு கதைப்பதற்கு கொஞ்சமும் துணிவு இருக்காது. என் நாவும் இதற்கு சம்மதம் தெரிவிக்காது.

நரம்பற்ற நாவினால் இவ்வாறு ஒரு பெண்ணைப் பற்றி புறங் கூறுபவர்கள் நான் ஒரு ஆறறிவு கொண்ட மனிதன் என்று சொல்வதற்கு கூட வெட்க்கித் தலை குனிந்து நிற்க வேண்டும். குரங்கிலிருந்து மனிதன் கூர்ப்படைந்தான் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் அவர்கள் இன்னும் குரங்காகவே உள்ளனர். பி

றரை விமர்சித்த பின்னர் நேரம் கிடைத்தால் சித்தித்துப் பாருங்கள் நீங்கள் ஒரு மனிதன் தானா என்று. இறுதியாக பகிரங்கமாக உங்களிடம் கூறுகின்றேன்.

நான் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்ட குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவன். நான் ஒரு தமிழன். தமிழே என் மொழி. தமிழே என் உயிர். தமிழன் என்ற வகையில் தமிழுக்கு நான் என்றும் தலை வணங்குகின்றேன். என் சேவை முழவதும் எனது தமிழ் மக்கள் சார்ந்ததாகவே இருக்கும். நன்றி