நிறுவனங்கள் மூடப்பட்டால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமா? − அமைச்சரின் இறுதி முடிவு

0

தனியார் நிறுவனங்களில் பணிப் புரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டு அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர் விடுமுறை பெற்றுக்கொள்வாராயின், அந்த ஊழியருக்கான சம்பளத்தை எந்தவித குறைவும் இன்றி முழுமையாக வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனியார் துறைகளில் கடமையாற்றும் 35 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மாத்திரமன்றி, அரச கூட்டுதாபனங்கள், சபைகள், திணைக்களங்களில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உரித்துடைய அனைவரது தொழில்களும் பாதுகாக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொவிட் தொற்று பரவல் காரணமாக தொழிலுக்கு வருகைத்தர முடியாது, வீடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளவர்களுக்கான சம்பளத்தில் பாதியையேனும், வழங்க முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஏதேனும், ஒரு தனியார் நிறுவனம் கொவிட் பரவல் காரணமாக சில காலம் மூடப்பட்டாலும், ஊழியர்களுக்கான சம்பளத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக நிறுவனமொன்று குறிப்பிடத்தக்களவு நட்டத்தை எதிர்கொள்வது உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால், அந்த நிறுவனம் ஆகக் குறைந்தது ஊழியர் ஒருவருக்கு 14,500 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என அமைச்சர் கூறுகின்றார்.

ஏதேனும், ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க மறுப்பு தெரிவிக்குமாக இருந்தால், அந்த நிறுவனம் தொடர்பில் தொழில் அமைச்சுக்கு அறிவிக்குமாறும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.