நுவரெலியாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 250க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
எனவே நாம் ஒரு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்பிரகாரம் டிசம்பர் மாதம் இறுதிப்பகுதிவரை நுவரெலியாவிற்குள் ஏனைய பிரதேசங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதை கட்டுப்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக பண்டிகைக்காலத்தின் போது அதனை தவிர்த்து செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நுவரெலியாவிலுள்ள மக்கள் மற்றும் அங்கு சுற்றுலா மேற்கொள்ள தீர்மானித்துள்ள ஏனைய பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நகர் பகுதிக்குள் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனினும் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வுட், கினிகத்ஹேனை ஆகிய பகுதகளில் தொற்றாளர்கள் பரவலாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
எனவே சுற்றுலா பயணங்களை தவிர்த்து செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.