நெருக்கடியான நிலை நீடித்தால் பயணத் தடை நீடிக்கும் – ஜனாதிபதி கோட்டபாய பணிப்புரை

0

எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னரான வார இறுதி நாளில் பயணக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக  இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இன்று காலை நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவ தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அன்றைய தினமே (25) இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எனினும், இந்த பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாது, தொடர்ந்து 14 நாட்களுக்கு நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் நேற்று கோரியிருந்தனர்.

கோவிட் தொடர்பான செயலணியின் பரிந்துரைகள் குறித்து தாம் அவதானம் செலுத்துவதாக அவர் கூறினார்.

28ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நீடிப்பது தொடர்பில் தேவை ஏற்படும் பட்சத்தில், 25, 26 அல்லது 27ம் திகதிகளில் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்படுமாக இருந்தால், தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும் என இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.