நேபாளத்தில் சிக்கியிருந்த 76 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான UL- 1425 என்ற விமானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) 3.30 மணியளவில், அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைவரும் விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள 93 பேரை அழைத்து வருவதற்காக குறித்த விமானம், இன்று காலை 8 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேபாளத்தின் காத்மண்டு நோக்கி பயணித்தது.
இதன்போது விமானிகள் உட்பட எட்டு பேர் பணியாளர்கள் பயணித்திருந்தனர். எனினும், 93 மாணவர்களில் 17 பேர் தயார் நிலையில் இருக்காத காரணத்தினால் 76 பேர் மாத்திரமே அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதேவேளை உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் தங்கியுள்ள மேலும் சில மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.