செல்வியின் முகப்புத்தக கருத்திற்கு – கி.சேயோன் பதிலடி!

0

கிழக்கு புலிகள் என்று மார்தட்டிய நேரத்தில்தான் கிழக்கில் பலபடுகொலைகள் இடம்பெற்றன இதற்கான பொறுப்பினை பிள்ளையான்குழுவினர் ஏற்றுக்கொள்வார்களா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவரும், கோறளைப் பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கி.சேயோன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளிட்டு அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் உரிமைப் போராட்டமாக உலகத் தமிழ் இனத்தின் அங்கீகாரத்துடன் இறுதிவரை நடைபெற்றது. சுதந்திரத்திற்குப் பின் இலங்கையை ஆண்ட எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களை கௌரவமாக எந்தக் காலகட்டத்திலும் நடாத்தியதில்லை. இதன் காரணமாகவே தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராட ஆரம்பித்து அது ஆயுதப் போராட்டமாக பரிணாமித்தது.

இந்நிலையில் 32க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் போராட புறப்பட்டு தத்தம் சுயநலத்திற்காக பல பிரிவாக பிரிந்து இறுதியில் எம்மை வந்தித்த அரசுகளோடு இணைந்து எம்மை அழித்ததே வரலாறு. இறுதிவரை தமிழ் மக்களின் விடுதலைக்காக, கொள்கைக்காக கன்னியமான முறையில் போராடியது தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமே இதை நான் சொல்லவில்லை இராணுவ ஆய்வாளர்களே கூறுகிறார்கள்.

ஏன், இறுதி யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவத் தளபதிகள் கூட ஒழுக்கம் சார்ந்து குற்றம் சாட்டப்படாத அமைப்பாகவே இன்னும் பார்க்கிறார்கள். இன்றைய பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ராணுவ தளபதியாகவும் இருந்த கமல் குணரட்ன எழுதிய நந்தி கடலுக்குச் செல்லும் பாதை எனும் நூலில் “எங்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடினாலும் ஒழுக்க ரீதியான கட்டமைப்புகளை கொண்டிருந்தார்கள்” என்று சொல்லத் தயங்கவில்லை.

விடுதலைப்புலிகளிடம் இருந்து பல வீடியோக்கள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன அதில் எதிலும் அவ்வமைப்பின் தலைவரோ, போராளிகளோ மதுக்கிண்ணங்களுடனோ அல்லது களியாட்ட நிகழ்வுகளிலோ இருந்ததனைக் காணப்படவில்லை என கூறுகின்றார். எதிரிகூட இவ்வமைப்பின் ஒழுக்கத்தினை பாராட்டி பெருமிதம் கொள்ளும் வேளையில் வரலாறு தெரியாமல் பிதற்றிவருகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி.

தமிழ் மக்களின் போராட்டம் பற்றியும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பற்றியும் இருக்கும் புதிருக்கான விடைகளை அவர்களின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரிடம் தெளிவடைந்து கொள்ள முடியும். தமிழருக்கே இருக்கின்ற ஒழுக்க குணத்தையும், பண்பாட்டு ரீதியான கோட்பாடுகளையும் இப்படிப்பட்டவர்களின் சுயநல சிந்தையால் மழுங்கடித்து வருவதனாலேயே தமிழினம் இன்னும் இழிநிலை காண்கிறது. என்பது இப்போதாவது பலருக்கும் புரிந்திருக்கும்.

இது இவ்வாறு இருக்க கிழக்கு புலிகள் என்று மார்தட்டிய நேரத்தில்தான் கிழக்கில் படுகொலைகள், ஆட்கள் கடத்தல்கள், கப்பம் கோரல்கள் எல்லாம் இடம்பெற்றன. இவற்றை எல்லாம் குறித்த காலத்தில் கிழக்கினை ஆண்ட நீங்கள் பொறுப்பினை ஏற்றுக் கொள்வீர்களா?

ஒட்டுமொத்த தழிழினத்தினையுமே இழிநிலைக்கு கொண்டு செல்லும் இவ்வாறானவர்களின் கருத்துக்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக அழிந்த வேதனையை மறந்து, மன்னித்து இயல்பு வாழ்வில் கலந்து வாழும் தமிழினத்தை கேவலப்படுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன். அத்துடன் இதை வன்மையாகவும் கண்டிக்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.