பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மறுசீரமையுங்கள்

0

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்துள்ள பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார்.

இதில், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, பல்கலைக்கழக கல்வி தொடர்பாக எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின், அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடிவரும் கல்வி முறைமையே தேவையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஜனாதிபதி வினவியதற்கு பதிலளித்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இம்முறை மாணவர் அனுமதி 7500 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.