பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம்(சனிக்கிழமை) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நவரசம் எனும் கவிதை நூல் வெளியிட்டமையின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமும், அவரது குடும்பத்தினரும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரும் ஆவணத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.