பயங்கரவாத பயிற்சி பெற்றதாக கூறப்படும் 24 வயது பெண்ணொருவர் கைது

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயது பெண்ணான குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் மாவனெல்லை பகுதியில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மாவனெல்லை புத்தர் சிலை அழிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்களில் பங்கேற்ற 6 பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைவாகவே நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.