பரம்பரை சொத்தை தங்களது சொத்து என்று கூறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல – சாணக்கியன்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் வீட்டையே தங்களது வீடு என்று கூறுகின்றவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றுக்கு சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது எமது சமூகத்தை பொறுத்தவரையிலே அரசியல் ரீதியாக ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால் இனிமேல் எதிர்காலம் என்பது வெறுமனே பாதைகள் புனரமைப்பு மற்றும் ஆலயங்களை புனரமைப்பதோ அல்ல. இந்த நாட்டிலேயே தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை அமைய வேண்டும்.

விஷேடமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புள்ளவர்கள் அதிகளவானோர் காணப்படுகின்றனர். அதிகளவான மாவீரர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் அவர்களுடைய உயிரை அர்ப்பணித்து இந்த ஆலய புனரமைப்புக்கோ வீதி புனரமைப்புக்கோ அல்ல. தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்ததற்கான காரணம் எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக. அது எங்களுடைய ஒருபோராட்டத்தின் ஒரு வடிவமாக இருந்தது ஆயுதப்போராட்டம்.

2009ஆம் ஆண்டிற்கு பிற்பாடு எமது போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அப்படியான அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுபவர்கள் இன்று அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தி கொண்டிருக்கின்றது.

இன்று வரைக்கும் எமது மாவட்டத்தில் பல இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு என்ன? முகநூலில் விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகளை இட்டது என்கின்ற காரணத்திற்காக அவர்களை சிறையில் வைத்தருக்கின்றார்கள்.

விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டது என்பதற்காக எங்களுடைய தமிழ் மக்களுடைய அரசியல் ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை.

என்னைப் பொருத்தளவில் நாங்கள் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இலாபத்திற்காக போராடியவர்கள் இல்லை.

இன்று வீதிகள் புனரமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகள் நடைபெறுவதாக இருந்தால் அது அரசாங்கத்தின் நிதி. அது தனியார் நிதி அல்ல. நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்றால் எங்களுக்கும் அதை தரத்தான்வேண்டும்.

சஜித் பிரேமதாசவின் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட் வீட்டுத்திட்டங்கள் பூர்த்தியடையாமல் உள்ளது. இந்த வீட்டுத் திட்டங்களை முடித்து தருமாறு கேட்டால் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நேரடியாக சொன்னார் நாங்கள் அதனை முடித்து தர மாட்டோம். ஏனென்றால் வடக்கு, கிழக்கில் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. தெற்கில் இருக்கின்ற மக்களைவிட அங்குதான் அதிகளவாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் நாங்கள் முடித்து தர மாட்டோம் என கூறுகின்றார்.

இந்த மாவட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்திக்கென தெரிவு செய்திருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் வரவில்லையா.

புதிதாக ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு என்ற ரீதியில் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு வீடு வழங்குகின்றார்கள். இந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் நிதி இல்லாமல் இருக்கின்ற அவர்களின் வீட்டினை முடித்துக்கொடுத்து இருக்கலாம் தானே.

இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு விடயங்களை மாத்திரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். தாங்களும் தங்கள் சார்ந்தவர்களுடைய தொழில் வாய்ப்புகளை தங்களுடைய வருமானங்களை அதிகரித்துக் கொண்டு போகின்றார்கள். இதுதான் நடக்கின்றது.

மண் மாப்பியாக்களை இயக்குவதை தவிர இவர்கள் இந்த மாவட்டத்திற்கு செய்த சேவையினை சொல்லுங்கள். நான் நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்களுக்கு ஆளுக்கு ஆள் மாறி ஊடக சந்திப்புகளை நடாத்தி தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லையென கூறியுள்ளனர்.

இதனை கூறுகின்றவர்கள்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண்தம்பிமுத்துக்கு சொந்தமான வீட்டினை தங்கள் வீடு என சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் மாற்றுபவர்களுக்கு அனுமதிபத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்லை.

ஒருவரின் பரம்பரை சொத்தை தங்களது சொத்து என கூறுகின்றனர். இவர்களுக்கு மண் அனுமதிப்பத்திரங்களில் பெயரை மாற்றுவது பெரியவிடமல்ல.

எமது பகுதிகளில் உள்ள வளங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.