ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமரின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும்கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது. உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.