பாடசாலைகளின் தவணை விடுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை

0

பாடசாலைகளுக்கு வழங்கப்படும் தவணை விடுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவிட் பரவலுக்கு பின்னர் பாடசாலைகள் மீண்டும் முழுமையாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவிட் நிலைமையின் அழுத்தம் காரணமாக இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரணதர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக ஒகஸ்ட் மாதத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒக்டோபர் மாதம் பாடசாலை விடுமுறை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளமையினால் இந்த வருடம் டிசம்பர் மாதத்தினுள் கல்வி நடவடிக்கை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாகவும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஒக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் புலமை பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடத்தப்படவுள்ளதுடன், சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வருடத்திற்கு 200 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும். கடந்த வருடம் 150 நாட்களுக்கும் குறைவாகவே நடத்தப்பட்டமையினால் பரீட்சைகள் பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.