பாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை..!

0

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு போதுமான நிதி அமைச்சிடம் இல்லை என அறிய முடிகின்றது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர், “பாடசாலைகளில் கை கழுவுவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு 418 மில்லியன் தேவைப்படுகிறது.

இந்த நேரத்தில், கல்வி அமைச்சுக்கு 100 மில்லியன் மட்டுமே இருப்பு உள்ளது” என கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த வசதிகளுக்காக நிதி ஒதுக்கும்போது, இத்தகைய வசதிகளை உருவாக்க அனுசரணையாளர்கள் / நலம் விரும்பிகள் / பழைய மாணவர்களை ஈர்க்க வழி இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வசதிகளை மேற்கொள்ள பெற்றோரிடம் இருந்து நிதி பங்களிப்பு தேவையில்லை என்று அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தாலும், பாடசாலைகளின் நலன் விரும்பிகள் அல்லது பழைய மாணவர்களிடம் கோரிக்கை விடுக்க அனுமதிக்கப்படும் என கல்வி அமைச்சின் செய்ரலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல் வசதிகளை எளிதாக்க அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களான பிரதேச செயலகங்கள், நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றை பங்களிப்பையும் அமைச்சு கோரியுள்ளது.

உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள்,மற்றும் திடீரென மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அந்த மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்ய 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.