பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மீள் பரிசீலனை வேண்டும் என வலியுறுத்து!

0

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் 11 ஆம் திகதி  நாட்டில் உள்ள பாடசாலைகள் யாவும் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.

கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 238 ஆக  உயர்ந்துள்ளது.

அதேபோன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் மே மாதம் முதல் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்களாக இருக்கும் என அறிவித்துள்ளது.

எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அவசரப்படத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.