பாராளுமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

0

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடாத்துதல் மற்றும் எதிர்வரும் அமர்வுகள் குறித்து பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவிடம் வினவியபோது, அமர்வுகளை நடத்துவது குறித்து சுகாதாரப் பிரிவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராரளுமன்றத்தின் அனைத்து கட்டடத் தொகுதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்திலுள்ள இருக்கைகளுக்கு இடையில் இரண்டரை அடி இடைவௌி காணப்படுகின்றது.

பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் போது, அனைவரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்பதுடன் விவாதங்களின் போதும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் எனவும் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாதுகாப்பின் நிமித்தம் பொதுமக்களை அனுமதிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது கூட்டத்தின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கள சேவிதர் கூறியுள்ளார்.