பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச? கொழும்பு ஊடகம் தகவல்

0

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் அல்லது அவருக்காக புதிய பதவி உருவாக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச தற்போது வேகமான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் மிகவும் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகளை கொண்டு உள்ள முக்கியமான அமைச்சராக இருந்து வருகிறார்.

அதேபோல் நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் உட்பட ஜனாதிபதியின் நேரடியான கட்டுப்பாட்டில் செயற்படுத்தப்படும் பல முக்கிய வேலைத்திட்டங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிராமத்துடன் உரையாடல் என்ற வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் உட்பட மக்களுடன் சம்பந்தப்பட்ட பல பொறுப்புகள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பல மாவட்டங்களில் இணைப்புக்குழுக் கூட்டங்களை நாமல் ராஜபக்சவே கண்காணித்து வருகிறார்.

இவற்றின் ஊடாக அவர் வேலை செய்ய முடியும் என்ற திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

குறிப்பாக கடந்த வார இறுதியில் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் தொழிற்நுட்பம் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவியானது. கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கக் கூடிய அமைச்சாக அமைந்துள்ளது. இதனை தவிர நாமல் ராஜபக்ச சீனாவின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர் என்பது இரகசியமான விடயமல்ல. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு் இடையிலான நேரடியான அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் மாநாடு ஒன்று அண்மையில் இணையத்தளம் வழியாக நடைபெற்றதுடன் அதற்கு நாமல் ராஜபக்சவே தலைமை தாங்கினார். மறுபுறம் நாமல் ராஜபக்சவின் இந்த வேகமான அரசியல் பயணம் தற்செயலாக நடந்தது அல்ல. 

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக, அந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தை சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் நாமல் ராஜபக்ச குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது.

இதனடிப்படையில் அரசியல் துறையினல் தற்போது பேசப்பட்டு வரும் இந்த வதந்தி உண்மையாக மாறுவதற்காக சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதுடன் சாதகமான அடையாளங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.