பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்து தவறானது – ஸ்ரீகாந்தா

0

‘திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்து தவறானது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத்தேர்தலினை விரைவில் நடாத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாக, பொதுத்தேர்தலினை ஒத்திவைக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை என்கிற கருத்து அரசாங்க தரப்பிலே நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24 வது பிரிவின் மூன்றாவது உப பிரிவு இதற்கு ஆதரவாக சுட்டிக்காட்டப்பட்டிருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24வது பிரிவின் மூன்றாவது உப பிரிவினை எடுத்துப்பார்த்தால் தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டு நெருக்கடி நிலைமை அல்லது எதிர்பார்க்கப்பட்டிராத சூழ்நிலைகள் காரணமாக திட்டமிடப்பட்ட படி அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தலினை நடாத்த முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையாளர் மீண்டும் பிரகடனத்தின் மூலம் தேர்தலுக்கு இன்னுமொரு திகதியினை நியமிக்க முடியும் என்றுதான் கூறப்பட்டிருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.