பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் – இலங்கையிலும் பரவும் அபாயம்

0

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மிகவும் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிரித்தானியா போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இந்த வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் இந்தியா, தென்னாபிரிக்கா, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரித்தானியாவுக்கான விமானப் பயணங்களை இரத்து செய்துள்ளன.

இதனிடையே கொரோனா வைரஸின் இந்த புதிய உருமாற்றம் அவுஸ்ரேலியா, டென்மார்க் முதலான நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.