பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – மஹிந்த!

0

பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டிய பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்காக தமது ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட துறைமுகம், விமான நிலையம் போன்ற வளங்களை இருநூறு வருட காலத்திற்கு விற்பனை செய்வதற்கு கடந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.

நாட்டின் வளங்களை இவ்வாறு விற்பனை செய்வது பாரிய குற்றமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.

அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வதற்கு எமக்கு இருநூறு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதுடன், ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த இருநூறு வருட காலத்திற்குள் குறித்த தேசிய வளங்களுக்கு என்ன நிகழும் என்பது தொடர்பில் எண்ணி பார்க்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.

எதிர்கால சந்ததியினருக்காக ஏதேனுமொன்றை விட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமது ஆட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு அபிவிருத்தி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர்,

எனவே இம்முறை தேர்தலில் இந்த செயல்கள் அனைத்தையும் மனதில் கொண்டு நன்கு சிந்தித்து தமது பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி சிறிகொத்தவை கைப்பற்றுவதற்கே மக்களின் ஆணையை பெற முயற்சிக்கிறது எனத் தெரிவித்த பிரதமர்,

ஆனால் தான் மக்களின் ஆணையை கோருவது நாட்டின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் கிராம மட்ட அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கே என்றும் குறிப்பிட்டார்.