பிள்ளையானுக்கு ஒரு நீதி, அரசியல் கைதிக்கு ஒரு நீதியா? ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் வாதம்

0

பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பசீர் வலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006 ம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தன் மற்றும் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான யோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்திணை பிரதான சான்றாகக் கொண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட பின்னர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு சட்டமா அதிபரின் சம்மதத்துடன் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டதுடன் சட்டமா அதிபர் வழக்கை தொடர்ந்து நடத்தவில்லையென நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதையடுத்து சிவநேசத்துரை சந்திரகாந்தனும் மற்றைய நான்கு கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் கனகரெத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரத்தில் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நீதிமன்றினால் 2019ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட போதிலும் கனகரத்தினம் ஆதித்தியனுக்கு இன்று வரை பிணை வழங்கப்படவுமில்லை விடுதலை செய்யப்படவுமில்லை.

2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு 5 வருடங்களில் வழங்கப்பட்ட நீதி பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய 2009ம் ஆண்டிலிருந்து 12 வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்டு மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே கைதியான ஆதித்தியனுக்கு வழங்கப்படவில்லை.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை பிரதான சான்றாகக் கொண்டு மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்களில் நான் ஆஜராகிய பல வழக்குக்களில் அரசதரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் விசாரணையில் நிராகரிக்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் சிறையிலும் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் எதிரியான கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக ஒரேயொரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் மூன்று வழக்குகள் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று வழக்குக்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்ச, இராணுத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யட்ட இரு வழக்குகளிலும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் வழக்கை தொடர்ந்து நடாத்த அரச தரப்பால் வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்படாமையினால் எதிரியாகிய கனகரத்தினம் ஆதித்தின் 2018ம் ஆண்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

மூன்றாவது வழக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கான இந்த வழக்கின் எதிரியாகிய ஆதித்தனால் சுயவிருப்பத்தில் வழங்கப்பட்டதாக அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்படவில்லையென நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டதுடன் கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக வேறு எந்தச் சாட்சியங்களும் இல்லாத நிலையில் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றில் தனது வாதத்தை முன்வைத்தார்

அரச தரப்பினதும் எதிரிதரப்பினாலும் முன்வைக்கப்பட்டவாத பிரதிவாதங்களையடுத்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு அறியத்தரவும் மேலதிக விசாரணைக்காகவும் மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராச்சி ஆகக் குறைந்த தவணைத் தினமாக 2021ம் ஆண்டு மே மாதம் 07ம் மற்றும் 10ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.