மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில தோல்வி அடைவது உறுதி என விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து தமிழ் கட்சிகள் போட்டியிட அழைப்பு விடுத்தும் எங்களை பிள்ளையான் நிராகரித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர் தெரிவில் மதுபானசாலை உரிமையாளர்களையும் ,வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நிறுத்தியுள்ளது இவ்வாறனவர்கள் எவ்வாறு மக்களுக்குசேவை செய்யப் போகின்றன என்பதே எனது கேள்வி.
அம்பாரை மாவட்டத்தில் ஏன் நான் போட்டியிடுகிறேன் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாரை மாவட்டத்தில் மக்களை புறந்தள்ளி உள்ளது. கடந்த 3 மாதகாலமாக மக்களது பிரச்சினைகளை நேரில் சென்று அவதானித்து அவர்களது குறைகளை தீர்த்து வருகின்றேன்.
கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் தான் நான் இங்கு களம் காண வந்துள்ளேன். நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற்று பெரு வெற்றி பெறுவோம் இந்தத் தேர்தலுடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களால் துடைத்தெறிய படுவார்கள் என்பதை உறுதிப்படுத்த கூறிக்கொள்கிறேன்” என்றார்.